அதிரை டுடே:.மே.16
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறி வருகிறது.
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய ஊரடங்கு அரசியலை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (மே.16) அறவழி முழக்கப் போராட்டங்கள் நடைபெற்றன.
அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் N.M.S. ஷாபீர் (நகர தலைவர்) தலைமை வகித்தார். S. அகமது அஸ்லம்(நகர துணை தலைவர், S.M.சாகுல் ஹமீது (நகர செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலை கண்டித்து C.அஹமது MSC(நகர துணை செயலாளர்) உரையாற்றினார். சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் குடை பிடித்து நடைபெற்ற இந்த அறவழி முழக்க போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.





0 Comments