அதிரை டுடே:பிப்.19மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்மணியின் ஹிஜாபை கழற்றச் சொன்ன பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவரின் வரம்பு மீறிய மதவெறிச் செயலை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) வன்மையாக கண்டிக்கிறது.
கர்நாடகாவில் பற்ற வைக்கப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான தீப்பொறி, தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலான கண்டனங்களுக்கு ஆளாகி ஐ.நா.வரை எதிரொலித்து இந்தியாவுக்கு அவப்பெயரையும், கரும்புள்ளியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹிஜாப் விவகாரத்தை கிளப்பி முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமையை பறித்து அவர்களின் எதிர்காலத்தை முடக்கும் முன்னெடுப்பை கர்நாடக பா.ஜ.க.அரசு திட்டமிட்டு செய்து வருகிறது.
கர்நாடக அரசின் காவி வெறிக்கு எதிராக வேறு எந்த மாநிலங்களை விடவும் தமிழகத்தில் முஸ்லிம் அல்லாத அனைத்து தரப்பு மக்களிடமும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்துவருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தையும் சீண்டிப்பார்க்கும் செயலில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.
மதுரை, மேலூரில் 8 வது வார்டில் உள்ள அல் அமீன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில்தான் பாசிச பா.ஜ.க.வினர் துணிச்சலுடன் ஹிஜாபை கழற்றச் சொல்லி இருக்கிறார்கள்.
தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.
வாக்குப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பா.ஜ.க. முகவரை பூத்திலிருந்து வெளியேற்றிய பிறகே வாக்குப் பதிவு தொடர்ந்துள்ளது.
மேலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர் கிரிராஜனை விசாரித்து வருகிறார்கள். அவன் மீது ஏற்கனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி பழனிகுமார் அவர்களின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு சென்ற உடனேயே, "வாக்காளர்கள் தங்கள் மத அடையாளங்களுடன் வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க வரலாம்" என்று சங்கிகளுக்கு சவுக்கடி தரும் வண்ணம் எதிர்வினை ஆற்றியது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஒரு சமுதாயத்தின் மத அடிப்படை உரிமையில் கை வைத்தும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்ட பா.ஜ.க. கிரிராஜனையும் , அவனுக்கு பின்புலத்தில் இருந்து தூண்டிவிட்டவர்களையும் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை மத உரிமைக்கு எதிராக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் விவகாரத்தைக் கிளப்பி, அதன் மூலம் முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி உரிமையை பறித்து அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் முயற்சியைப் போலவே, வாக்குப் பதிவின்போதும் தங்களின் மதவெறியை அரங்கேற்றி, ஹிஜாபை கழற்றச் சொன்னால் முஸ்லிம் பெண்கள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வர மாட்டார்கள். அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற குரூர எண்ணத்தில் தான் இது நடந்துள்ளது.
முஸ்லிம்களை சீண்டிப்பார்த்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க பல் நோக்கு திட்டங்களுடன் களமிறங்கி இருக்கும் பா.ஜ.க. சங்கிகளை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதற்கு தமிழக மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்பதையும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments