பட்டுக்கோட்டையில் குடும்பத்துடன் தற்கொலை..! போலிசார் தீவிர விசாரணை..?

அதிரை டுடே ஆகஸ்ட்.2 பேத்திகள் மற்றும் 2 வளர்ப்பு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, மகளுடன் ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயரம் பட்டுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.


பட்டுக்கோட்டையில் சாந்தி என்ற 50 வயது பெண் வளவன்புரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மகள் மற்றும் 2 பேத்திகளுடன் வசித்து வந்தார். இவர்கள் 2 வளர்ப்பு நாய்களையும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் சகாதேவன், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சுமதி முன்னிலையில், சாந்தி தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர்.

அப்போது சாந்தி மற்றும் அவரது மகள் துளசிதேவி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். மேலும் சாந்தியின் 2 பேத்திகளும், 2 நாய்களின் உடல்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளும், நாய்களும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இறந்த நால்வரின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 2 நாய்களின் உடல்கள் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

'/>