அதிரை டுடே:மே.04
நம்ம ஊரில் சிறுவர்களுக்கு போர் அடிக்குது என்றால், கிரிக்கெட் விளையாடுவார்கள், சைக்கிளிங் பண்ணுவார்கள். ஆனா, இப்போதுதான் ஊரடங்காச்சே... வீட்டில் தாயம், லூடோ விளையாடுகிறார்கள், டிவி பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் சமைத்து பார்த்து பெற்றோர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.
அமெரிக்காவில் போர் அடிக்கிறது என்பதால், கார்களை திருடி அதனுடன் போட்டோ எடுத்து விளையாடிய 19 சிறுவர்கள் சிக்கி உள்ளனர். இவர்கள் திருடிய கார்களின் மதிப்பு 8.36 கோடி.அமெரிக்காவின் வடக்கு கரோலினா உள்ள பகுதி போர்சித் கவுன்ட்டி. இங்கு அடிக்கடி பல விலை உயர்ந்த கார்கள் திருடு போயின. இதுதொடர்பாக பல புகார்கள் வந்ததால் போலீசாருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.
அதையடுத்து, கார் திருடர்களை பிடிப்பதற்காக உளவுத்துறையினரை போலீசார் முடுக்கிவிட்டனர். இதில் தான் திருட்டு கார் ஒன்றை வைத்திருந்த மெகீல் பின்ஸ் என்ற 19 வயது பருவ வயது சிறுவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சித்தான் காத்திருந்தது. காரணம், அனைத்து கார்களையும் திருடியது 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். இதில் மிகச்சிறிய சிறுவர்கள் வயது 9. இவர்கள் ஆடி, போர்டு, ஹோண்டா, செவர்லே, லெக்சஸ், டோயோட்டா என்ற விலை உயர்ந்த கார்களை எல்லாம் சர்வசாதாரணமாக பூட்டை திறந்து திருடிச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக சவால் விட்டு கார்களை திருடி உள்ளனர்.
அதாவது முதலில் குழுவாக சென்று ஒரு விலை உயர்ந்த காரை பார்ப்பார்கள். அந்த காரை திருடுவது தான் இவர்களின் இலக்கு. இதில் டாஸ் போட்டு யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். அவன் அந்த காரை திருடி தாங்கள் சொல்லும் இடத்துக்கு கொண்டு வர வேண்டும். அங்கு வைத்து, அவனுக்கு ஹீரோ பட்டம் சூட்டுவார்கள். அத்துடன் அந்த காருடன் போட்டோ எடுத்துக் கொள்வார்கள்.
பொழுதுபோக்கிற்காக இவர்கள் திருடிய 46 கார்களின் மதிப்பு, ₹8.36 கோடி என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த கும்பலில் இருந்தது மொத்தம் 19 பேர். கார் திருட்டுக்கு பின்னர் தங்களுக்கு பணம் தரும் (கைச்செலவுக்குத்தான்) நண்பர்களிடம், அந்த காரை தந்துவிடுவார்களாம். அப்படி காரை வாங்கியவன்தான் மெகீல் பின்ஸ்.
பிடிபட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை போலீசார் கைது செய்யவில்லை மாறாக திருட்டு கார்களை வைத்திருந்தது, ஊரடங்கு காலத்தை மீறி வெளியே வந்தது போன்ற சிறிய வழக்குகளை மட்டும் பதிவு செய்துள்ளனர். இதில் அபராதம் அதிகம் வரும். ஆனால், கைது இருக்காது. ஆனால், சிறுவர்களின் பெற்றோர்களிடம் விஷயத்தை கூறி, அவர்களை அடக்கி வைத்திருக்காவிட்டால், பெரும் பிரச்னைகள் உருவாகும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த சிறுவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பட்டியலில் இருப்பார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போர் அடித்தால் கார் திருடும் இந்த கும்பல் பற்றிய விஷயம் தெரிந்து இப்போது, அந்த கவுன்ட்டில் வீட்டில் வெளியே கூட யாரும் கார்களை நிறுத்துவதில்லையாம்.
0 Comments