பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் போராட்டம்

அதிரை டுடே.மார்ச் 13




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 2020 மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் ஆ.ஹாலித் முகமது, பொதுச் செயலாளர் அ.முஹைதீன் அப்துல் காதர் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
தீர்மானம் 1: பாப்புலர் ஃப்ரண்ட் டெல்லி மாநில நிர்வாகிகளை கைது செய்துள்ள மத்திய பாஜக அரசின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் ஈடுபட்ட சங்க பரிவார சக்திகளையும் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறையையும் கண்டித்து ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகம் திட்டமிட்ட நிலையில் டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட குண்டர்களை கைது செய்யாமல் பாப்புலர் ஃப்ரண்ட் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை டெல்லி காவல்துறை சுமத்தி வருகின்றது. இதனை கண்டித்து 13.03.2020 அன்று நாடு தழுவிய போராட்டத்தை பாப்புலர் ஃபரண்ட் அறிவித்துள்ளது அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் 13.3.2020 அன்று அனைத்து மாவட்டங்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அடக்குமுறைக்கு எதிரான இப்போராட்டத்தில் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று இச்செயற்குழு அழைப்பு விடுக்கின்றது.

தீர்மானம் 2: கோவை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட சங்பரிவார குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கோவையில் கடந்த சில நாட்களாக சி.ஏ.ஏ ஆதரவு போராட்டம் என்ற பெயரில் பாஜக நடத்திய போராட்டத்திற்கு பின்னர் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பால், ஆட்டோ ஓட்டுனர் சாகுல் ஹமீது ஆகியோர் மீது சங்பரிவார குண்டர்கள் கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களே இதுபோன்ற இனக்கலவரங்களுக்கு காரணமாகும். இந்த உண்மை கோவை காவல்துறைக்கு தெரியும் என்றாலும் இந்துத்துவ சக்திகளை திருப்திப்படுத்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்துள்ளது மாவட்ட காவல்துறை. எனவே, தமிழக அரசும், மாநில காவல் துறையும் கோவை மண்ணை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் இந்துத்துவ அமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதோடு  தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து மத மோதலை தூண்டும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக தேசிய செயலாளர் H. ராஜா உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.

தீர்மானம் 3: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பெரும் துயராமாகும்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனோ வைரஸ் மிகப்பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரியதாகும். இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில் இந்திய மக்களையும் இது பீதி வயப்படுத்தியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மக்களை அச்சப்படுத்தாமல் அறிவூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 4: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் புதிய மண்டல தலைவர்வர்கள், மண்டல செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினராக மெளலவி செய்யது இப்ராஹிம் உஸ்மானி (தென்காசி) அவர்கள் நேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் புதிய மண்டல தலைவர் மண்டல செயலாளர்கள் மாநில செயற்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை மண்டலத்தின் தலைவராக A.ஆபிருத்தீன் மன்பயி (கடலூர்) அவர்களும், மண்டல செயலாளராக H.அஹமது முஹைதீன் (காஞ்சிபுரம்) அவர்களும், மதுரை மண்டலத்தின் தலைவராக S.P நஸ்ருதீன் (மதுரை) அவர்களும், செயலாளராக A.யாசர் அரபாத் (தேனி) அவர்களும், கோவை மண்டலத்தின் தலைவராக A. அன்வர் உசேன் (கோவை) அவர்களும், செயலாளராக M.ஜெய்னுலாபுதின் (திருப்பூர்) அவர்களும், நெல்லை மண்டலத்தின் தலைவராக S.M. திப்புசுல்தான் (தென்காசி) அவர்களும், செயலாளராக S.சாகுல் ஹமீது (கன்னியாகுமரி) அவர்களும், திருச்சி மண்டலத்திற்கு S.அமீர் பாஷா (திருச்சி) அவர்களும், செயலாளராக S. ரஷீத் அஹ்மது (புதுக்கோட்டை) அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தகவல் :
அ.முஹைதின் அப்துல் காதர்
மாநில பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Post a Comment

0 Comments

'/>