அதிரை டுடே:ஜன.11
மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதை இரயில் உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டம் 11.01.2020 சனிக்கிழமை காலை அறந்தாங்கி வர்த்தகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் என். ஜெயராமன் தலைமை வகித்தார். அறந்தாங்கி வர்த்தக சங்க பொருளாளர் எஸ் .சலீம், புதுக்கோட்டை மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் டி. ஏ.என் .ஏ .பீர் ஷேக் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கி கோட்ட இரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் எஸ். வரதராஜன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள அனைத்து இரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக பணியாட்களை நியமிக்கவேண்டும். மயிலாடுதுறை- காரைக்குடி வழித்தடத்தில் முன்பு ஓடிய அனைத்து இரயில்களையும், விரைவு ரயில்களையும் , மீண்டும் இயக்க வேண்டும். இது சம்பந்தமாக புது டெல்லிக்கு சென்று இரயில்வே அமைச்சர் மற்றும் இரயில்வே போர்டு தலைவர் இருவரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் திருச்சி இரயில்வே ஜங்ஷனில் மத்திய அரசு மற்றும் இரயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம், தேவைப்பட்டால் மார்ச் 2020 க்கு முன்னதாக இரயில் மறியலும் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள அனைத்து ஊர்களிலும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவது , கண்டன ஆர்ப்பாட்ட விளக்க கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சட்ட ஆலோசனை பெற்று இரயில்வே நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்களை இப்பகுதியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் போன்ற அனைத்துமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் ஆதரவை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . கூட்டத்தில் திருவாரூர், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளைச் சேர்ந்த இரயில் உபயோகிப்போர் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், தன்னார்வ தொண்டு அமைப்பினர் மற்றும் இரயில் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
0 Comments