பாகிஸ்தான் விமான விபத்தில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள்: விசாரணை தீவிரம்..!
பாகிஸ்தான் விமான விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் லாகூரில் இருந்து 91 பயணிகள், 8 ஊழியர்களுடன் கராச்சி நகருக்கு பாகிஸ்தான் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் பிகே 8303 விமானம் புறப்பட்டது. இந்நிலையில் விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் மலிர் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் நொறுங்கியது. இதில் 25 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்தின் காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுந்துள்ளன. விமானி அந்த விமானத்தை எப்படி கையாண்டார்? விமான காக்பிட்டில் உள்ள குழுவினர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பிரச்னைகள் தொடர்பாக ஏன் தெரிவிக்க முடியாமல் போனது? என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த விபத்துக்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறையின் அறிக்கையின்படி, விமானத்தை தரையிறக்குவதற்கான விமானியின் முதல் முயற்சியில் ஏர்பஸ் ஏ-320ன் எஞ்சின் ஓடுதளத்தை மூன்று முறை உரசியதாகவும், அதன் மூலம் ஏற்பட்ட உராய்வால் தீப்பொறிகள் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மூன்றாவது முயற்சிக்கு பிறகு விமானம் மீண்டும் பறந்ததாகவும், ஆனால் காக்பிட்டில் இருந்த குழுவினர் தரையிறக்க சிரமம் உள்ளதா என விமான கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3000 அடிக்கு விமானத்தை உயர்த்துமாறு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூறியதாகவும், ஆனால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உயர்த்த முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான கட்டுப்பாட்டு அறை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விமானத்தின் கருப்பு பெட்டி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி அர்ஷத் மாலிக் தெரிவித்துள்ளார்.
0 Comments